பிளேடு பாய்க்கு பயந்து ராயப்பேட்டை ஆஸ்பத்திரி கேட்டை மூடிய மருத்துவர்கள்..! இங்கேயும் போலீஸ் லேட் தான்..!
Published : Jan 25, 2023 1:19 PM
பிளேடு பாய்க்கு பயந்து ராயப்பேட்டை ஆஸ்பத்திரி கேட்டை மூடிய மருத்துவர்கள்..! இங்கேயும் போலீஸ் லேட் தான்..!
Jan 25, 2023 1:19 PM
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிளேடால் அறுத்துக் கொண்டு வந்த கஞ்சா போதை ஆசாமிக்கு பயந்து மருத்துவமனை கேட்டு இழுத்துப் பூட்டப்பட்டது. ஆம்புலன்ஸை வழி மறித்து ரகளை செய்தவரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்த போலீசாரின் பெருந்தன்மை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் அரைபாடி இளைஞர் ஒருவர் அவரது மனைவியுடன் வந்து ரகளையில் ஈடுபட்டார்.
முகத்தில் ரத்த காயத்துடன் காணப்பட்ட அவர் கையில் பிளேடுடன் நின்றதால் அவருக்கு பயந்து மருத்துவமனையின் இரும்பு கேட்டை மருத்துவ பணியாளர்கள் இழுத்துப்பூட்டினர்...
அந்த கஞ்சா குடிக்கியிடம் இருந்த பிளேடை மனைவி பறித்துக் கொண்ட நிலையில், அதனை கேட்டு மிரட்டியபடி மருத்துவமனை கேட்டை திறக்ககோரி ஆபாசமாக திட்டி சத்தமிட்டான்..
எப்போதும் அங்கு பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டிய போலீசார் மிஸ்ஸிங் என்பதால் உடனடியாக அவசர போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸ் உதவி ஆய்வாளர், கஞ்சா போதை ஆசாமியிடம் அங்கிருந்து செல்லும்படி கூற அவரை ஒரு பொருட்டாக கூட மதிக்காத அந்த இளைஞர், வெளியே சென்ற ஆம்புலன்ஸை தட்டி நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஏன்? ஆம்புலன்ஸை தட்டினாய் எனக்கேட்க , அவர் தட்டவில்லை எனக்கூறி சமாளித்ததோடு, ஆம்புலன்ஸை மறித்து ரகளை செய்தார்
அவரை அப்புறப்படுத்தி காவல் நிலையம் அழைத்துச்செல்ல போதிய போலீசார் வராததால் அந்த கஞ்சா குடிக்கி அட்டகாசம் நீண்டு கொண்டே போனது.
ஒரு கட்டத்தில் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆட்டோவில் ஏற்றி திருவான்மியூரில் உள்ள அவனது வீட்டுக்கு போலீசார் பெருந்தன்மையுடன் அனுப்பி வைத்தனர்.
24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் ஒரு மருத்துவமனையின் கதவுகளை இழுத்து மூடும் அளவுக்கு ரகளை செய்தவன் கஞ்சா போதையில் இருப்பதாக கூறி போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தால் கஞ்சா புழக்கத்தையும், கஞ்சா பழக்கத்தையும் எப்படி ஒழிக்க முடியும் என்பதே அங்கு நின்றிருந்த சாமானியர்களின் ஆதங்கமாக இருந்தது.